1754-ஆம் ஆண்டில் திருதாங்கூர் சமஸ்தானத்தின் இராணுவச் செலவுகளுக்காக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டும் ‘தலைஇறை’ எனும் வரி விதிக்கப்பட்டது. இதனைக் கட்ட முடியாமல் பலரும் திருநெல்வேலிக்குத் தப்பியோடினர். 1807-ஆம் ஆண்டு மட்டும் ஈழவர், நாடார், சாம்பவர் சாதி மக்களிடம் ‘தலைஇறை’யாக ரூபாய் 88,000 வசூலிக்கப்பட்டது. இதைப் போலவே, ஆடவரின் மீசைக்கு, வளைந்த கைப்பிடியுள்ள குடைகளுக்கு, பெண்களின் மார்புகளுக்கு எனப் பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டன.
விடுதலைக்கு முன்பு திருவிதாங்கூர்-கொச்சி சமஸ்தானத்தில் தற்போதைய கேரளாவின் பெரும்பகுதியும் தமிழகத்தின் தென்பகுதியான கன்னியாகுமரி மாவட்ட ஊர்களும் இடம்பெற்றிருந்தன. இந்துமத ஆட்சியாளர்களின் கட்டுக்குள்ளிருந்த இந்தப் பகுதியில் மனுதர்ம ஆட்சி நடந்தது. சாணார், பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட பதினெட்டு சாதிகளைச் சார்ந்த பெண்கள் மேலாடை அணிவது குற்றமாகக் கருதப்பட்டது. நம்பூதிரிகள், நாயர்கள் ஆதிக்கத்தில் இருந்த அரசு “கீழ்சாதிப்” பெண்களை தோள் சீலை அணியவோ, மார்பகங்களை மறைக்கவோ அனுமதிக்கவில்லை. இந்த அடக்குமுறையை எதிர்த்து, சாணார் (நாடார்) சாதியைச் சார்ந்த பலர் கிறித்தவ மதத்துக்கு மாறினர். ஏறத்தாழ 37 ஆண்டுகள் “தோள்சீலைப் போராட்டம்” எனும் பெரும் போராட்டத்தை நடத்தினர்.
இதைவிடக் கொடுமையான விடயம் பெண்களின் மார்புகளுக்கு “முலை வரி”யும் விதிக்கப்பட்டது. “கீழ்சாதி” மக்கள் கோவில் தெருக்களில் செல்லவும், “உயர்சாதி”யினரின் தெருக்களில் செல்லவும், பொதுக்கிணறு, குளம் போன்றவற்றில் தண்ணீர் எடுக்கவும் குளிக்கவும், காற்றோட்டமுள்ள வீடுகளில் வசிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அம்மக்கள் திருமணங்களில் தாலி கட்டுவதற்கும் வரி கட்ட வேண்டியிருந்தது. வீட்டில் பசு மாடுகள் வளர்த்தாலோ, மண்வெட்டிகள் மற்றும் அரிவாள்கள் வைத்திருந்தாலோ வரி விதிக்கப்பட்டது. பனைத்தொழில் செய்துவந்த சாணார் மக்கள் தீண்டத்தகாதவர்களென்று தள்ளி வைக்கப்பட்டு, பனை மரங்களுக்கும் வரி செலுத்தக் கட்டாயப்படுத்தப்பட்டனர். மேலாடை அணிவதற்கு மட்டுமல்ல, தெய்வங்களை வழிபடுவதற்கும்கூட தடை விதிக்கப்பட்டிருந்தது.
இன்னோரன்ன கொடூரமான நடைமுறைகளைப் பார்த்த பிரிட்டானிய ஆட்சியாளர்கள் “திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவும் சாதியக் கொடுமைகளைப் போன்று உலகில் வேறெங்கும் கண்டதில்லை” என கருத்துத் தெரிவித்தனர். இக்கொடுமைகளைக் கண்ணுற்றதால்தான் சுவாமி விவேகானந்தர் “திருவிதாங்கூர் சமஸ்தானம் பைத்தியக்காரர்கள் வாழும் இடம்” என்று கண்டித்தார்.
நாளடைவில் கிறித்தவ மதத்துக்கு மாறியப் பெண்கள் ‘குப்பாயம்’ எனும் உடையை அணிந்தபோது, உயர்சாதியினர் கலவரம் செய்தனர். எடுத்துக்காட்டாக, 1822-ஆண்டு கல்குளம் மற்றும் இரணியல் பகுதிகளில் கலவரம் மூண்டது. ஆங்கிலேயர்களின் தலையீட்டின் பேரில் 1823-ஆம் ஆண்டு பத்மநாபபுரம் நீதிமன்றம் கிறித்தவர்கள் மட்டும் குப்பாயம் அணியலாம் என்று அறிவித்தது. பின்னர் 1859 சூலை 26 அன்று ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி அனைத்து நாடார் பெண்களும் கிறித்தவப் பெண்களைப் போல குப்பாயம் அணிந்துகொள்ள அனுமதிக்கப்பட்டாலும், உயர்சாதிப் பெண்கள் (நம்பூதிரி, நாயர், வெள்ளாளர்) அணிவது போன்ற ஆடை அணிய அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும் தாழ்த்தப்பட்ட பிற சமுதாயத்தினருக்கு இவ்வுரிமை கிடைக்கவில்லை. அதே ஆண்டு டிசம்பர் 30 அன்று கோட்டாறு பகுதியில் கிறித்தவ நாடார்களுக்கும் நாயர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. இதில் இந்து நாடார்கள் கிறித்தவர்களுடன் கைகோர்த்துப் போராடினர். பின்னர் கிறித்தவ மிஷனரிகளின் வழிகாட்டலில் போராட்டம் தொடர்ந்தது. 1865-ஆம் ஆண்டு ஆயில்யம் திருநாள் ராமவர்மா மகாராஜா மற்றொரு அறிவிப்பை வெளியிட்டார். அதன் மூலம் அனைத்து சாதியைச் சார்ந்த மக்களும் மேலாடை அணிய அனுமதி வழங்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட அக்கிரமங்களைப் பார்த்து வெகுண்டெழுந்த முத்துக்குட்டி சுவாமி தன் மக்களை மார்பிலும், முட்டிக்குக் கீழேயும் ஆடையணியுங்கள், தங்கத்தில் தாலி கட்டுங்கள், இடுப்பில் குடம் வைத்து தண்ணீர் எடுங்கள், கருவறையில் நீங்களே சென்று பூசை செய்யுங்கள், வணங்குங்கள் என்றுப் பணித்தார். இப்போராட்டங்களை “உயர்சாதி”யினர் கடுமையாக எதிர்த்தனர். மேலாடை அணிந்த காரணத்தால் கர்ப்பிணிப் பெண்களை ஏரில் பூட்டி அடித்துக் கொன்றனர். சிலரை சுடுமணலில் நாள் முழுவதும் நிற்க வைத்தனர். மேலாடை அணிந்த பெண்களின் மார்புகளை வெட்டி எறிந்தார்கள். மேற்குறிப்பிட்டக் காட்டுமிராண்டித்தனமான சாதிக்கொடுமைகளை இந்துமத மடாதிபதிகளோ, சைவ மடாதிபதிகளோ, அல்லது சங்கராச்சாரியார்களோ கண்டிக்கவுமில்லை, எதிர்க்கவுமில்லை.
உண்மையில், 1937—ஆம் ஆண்டு வரையிலும்கூட ஒடுக்கப்பட்ட சாதியினர் தங்கள் வீட்டுக் கதவுகளை குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் அமைக்கக் கூடாது, வீட்டில் செம்புப் பாத்திரங்கள் பயன்படுத்தக்கூடாது, நிலம் வைத்திருக்கக் கூடாது, செல்லப் பெயர்களைச் சூட்டிக்கொள்ளக் கூடாது என்பன போன்ற நிர்ப்பந்தங்கள் தரப்பட்டன. ‘சோறு’ என்பதை ‘கஞ்சி’ என்றும், தமது வீடுகளை ‘குடிசை’ என்றும் அழைக்கும்படி அவர்கள் வற்புறுத்தப்பட்டனர். இன்றைக்கு இருபத்தியொன்றாம் நூற்றாண்டில்கூட பல இடங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் மாடி வீடு கட்டக்கூடாது, ஆண் நாய் வளர்க்கக்கூடாது என்று நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். “மேல்சாதி”யினர் வீட்டு பெண் நாய்கள் தாழ்த்தப்பட்டோர் வளர்க்கும் ஆண் நாய்களோடு புணர்ந்துவிடக் கூடாது என்பதை உறுதி செய்யுமளவுக்கு சாதீயம் புரையோடிக் கிடக்கிறது நமது சமூகத்தில். தற்போது “பசுவை வணங்கு, மாமிச உணவை உண்ணாதே” என்றெல்லாம் கெடுபிடிகள் மக்கள் மீது திணிக்கப்படுகின்றன.
இத்தனை அநியாயங்கள், அக்கிரமங்கள் பலவீனமான மக்கள் மீது ஏவப்பட்டாலும், எங்கேயுமே “அவர்களோடு படுக்காதே” என்கிற கட்டுப்பாடு மட்டும் கிடையவே கிடையாது. நம்பூதிரிகள் “தீண்டத்தகாத கீழ்சாதிப்” பெண்களை எப்போது வேண்டுமானாலும், குறிப்பாக, அவர்களின் திருமணத்துக்கு முன்னர், புணர உரிமை பெற்றவர்களாக இருந்தனர். சில தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த ஆண்கள் அந்த வன்புணர்ச்சியை “தெய்வ பாக்கியம்” என்று கருதி நம்பூதிரிகளுக்கு இணக்கமாக நடந்தார்கள். வேறு எந்தச் சமூகத்திலும் இல்லாத மாந்தநேயமற்ற பார்ப்பனீய மந்திர தந்திரங்கள் தெற்காசியப் பகுதியிலேயே அரங்கேறின.